காதலர்தின சிறப்பு குறுங்கவிதைகள்- பாகம் 2

posted Feb 13, 2010, 7:04 AM by Ahilan Nadesan   [ updated Mar 15, 2010, 7:36 AM by Prasath Mendis Appu ]

 

காதலே!
இந்த ரோஜாப்பூவை பிடுங்கும்போது
ஒரு கண்டிப்பான உத்தரவு பிறந்தது!
இம்முறையும்
இதை கொடுக்க முடியாது போனால்
இனிமேல் பூக்க மாட்டேன் என்று
அதனால்தானேனும் வாங்கிக்கொள்…

*****************

நீ நடந்து செல்லும் வழியைப்பார்த்து
பூக்களை பரவிவிடவும்
உன் கால்தடங்களைத்தேடி
வேர்களை அனுப்பவும்
இந்த மரம் பழகிவிட்டது…
என்ன அதிசயம்!
உன் பாதங்களில்
மிதிபட்ட பூக்களில் மட்டும்
எறும்புகள் மொய்க்கின்றன…

********************
நிலா
ஆகா எத்தனை அழகு!
உன்னில் உரசிக்கொள்ள தவறிய
மேகங்கள் சேர்ந்து
வடிக்கும் கண்ணீர்தான் மழை!
இந்த நேரத்தில்
சந்திரனில் உயிர்வாழும் கவிஞன்
உன்னைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பான்…
“நிலா அங்கிருக்க என்பூமி ஏன் தேய்கிறது?”

*****************

பெண்ணே!
அந்த மலை முகட்டிற்குச்செல்
நீயா நிலவா என்று
மேகங்கள் தீர்ப்பு வழங்கட்டும்!

***********************

இந்த வண்ணத்துப்பூச்சியை
இறக்கிவிட்டுப்போகும்
பேருந்து சாரதிக்கும்
நடத்துனருக்கும்
வயது நூறு…
அந்த ஆசனத்தில்
இப்பொழுது இருப்பவனுக்கு
வயது அறுநூறு…

*********************

ஏய் முட்டாள்களே!
இந்த விரிவுரை மண்டபத்தின் நடுவே
ஒர் அழகான தாமரைப்பூ பூத்திருப்பது
தெரியவில்லையா?
அங்கே என்ன படம் பார்க்கிறீர்?
யார் அங்கே முன்னால் நின்று முணுமுணுப்பது?
முட்டாள்களே!-காரையம்சன்-
Comments